வீட்டிற்கான வழி!

The Way Home

நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.

ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.

அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.

பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.

இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.

பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.

பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.

பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக bus இல் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, Bus கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது.

பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.

இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியானது ஆரம்பத்தில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போட்டி விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* போட்டியில் கல்லூரி மாணவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். எனவே, உலகத் தமிழர் அனைவரும் பங்கேற்கலாம்.

* போட்டி முடிவுத் தேதி மே 15ஆம் திகதி.

விபரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா வலைவாசல் செல்லுங்கள்.

இச்செய்தியை தயவு செய்து குழுமங்கள், மன்றங்கள், வலைப்பதிவுகள், Twitter என்று எல்லா இடத்திலும் இணைத்து விடுங்கள். அத்துடன் இதில் பங்களிப்பு செய்யக் கூடியவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!

தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு  கட்டுரைப்போட்டிக்கான வலைவாசல் பார்க்கவும்.

நன்றி.

நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் வித்யா’ வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.

எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.

Web Hosting Sale – 1 GB @ 10 USD per year

இந்த வலைப்பதிவு போலவே உங்கள் சொந்தப் பெயரில் தளம் வேண்டுமா? ஆண்டுக்கு 10 US Dollar செலவில் 1 GB இடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் Web hosting பார்க்கவும்.

வாசிப்பு – The Zahir!

Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.

அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாக பலரிடம் இருக்கும் இயல்புகள் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

கதாசிரியர் அந்தக் கதையின் கதை சொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.

கதையில் காணாமல்போன (‘இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன’ என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.

கதையின் முடிவில் மனைவி கணவனிடம் கூறும் ஒரு வசனம் எதற்காக என்று, இன்னமும் எனக்குப் புரியவில்லை. வாசித்தவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டும் :) .

கதை முடிந்த பின்னர் ‘கதாசிரியர் குறிப்பு’ மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

கோமாளிகள் நாள்!

எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. :)

வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் :) .

1. திங்கள் – pyjama day

இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.

2. செவ்வாய் – gym games day

முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).

2. புதன் – Skiing day

இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள் :) . ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள் :( . விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.

3. வியாழன் – crazy day

அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then :) . Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.

இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க :)

அழகோ அழகு!

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது :) .

என் செல்லக் குட்டிம்மா!

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

இது ஒரு பனிக்காலம்!

இது ஒரு அழகான பனிக்காலம்!

நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை :) . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் :) . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை :) . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.

வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.


நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.

அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.


Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?’ என்ற கேள்வி எழுந்துள்ளது :( . காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.

பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது :( . இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.

அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.

←Older