பகிர்தல்!

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே ‘வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே’ என்கின்றார்.

இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முழுவதும் சொல்லி முடிக்க முதலே, இவர் ”நாம் வேறு ஏதாவது மகிழ்ச்சியாக பேசலாமே” என்கிறார். அது எப்படி கவலையில் வரும் ஒருவர், இவர் கேட்டதும் மகிழ்ச்சியாக பேச முடியும் என்பதை அவர் யோசிக்கவே இல்லையா என்று எனக்குத் தோன்றியது. எமது நாட்டுப் பிரச்சனை, அல்லது மக்களின் பிரச்சனை பற்றி ஏதாவது பேச்சு வரும்போது, நான் கவலைப்பட்டாலும், அவர் எனக்கும் இதையே சொல்லுகின்றார்.

சிலவேளை அவர் அப்படி சொல்வது, அவரால் அப்படி கவலையான விடயங்களை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தினாலாக இருக்கலாம். ஆனால் அந்த சினேகிதியும், இவரிடம் ஒரு மன ஆறுதலுக்குத்தானே சொல்ல வந்தார். இவர் இப்படி கேட்க மறுத்தால் அவருக்கு அது மனப் பாரத்தை கூட்டாதா என்று தோன்றியது.

மகிழ்ச்சியோ, துக்கமோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுதானே ஆறுதல்.

Related posts

Comments (4)

ரவிSeptember 25th, 2009 at 2:11 am

உங்கள் உடன் பணியாற்றுபவரின் அணுகுமுறை தவறு என்று சொல்ல முடியாது. சில பேர் எப்போது பார்த்தாலும் புலம்புவதற்கென்றே அடுத்தவர்களிடம் பேசுவார்கள். இது நாளடைவில் எரிச்சலடைய செய்வதுடன் நம் மனநிலையையும் பாதிக்கும்.

கலைSeptember 25th, 2009 at 4:03 pm

எப்போ பார்த்தாலும் புலம்புபவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அதுக்காக எப்போதாவது, யாராவது, ஏதாவது கவலை சொல்லும் போதெல்லாம், எப்போதும், நாம கவலை பத்தி பேச வேண்டாம், சந்தோசமா பேசுவோம்னு சொன்னா எப்படி?

அடலேறுSeptember 26th, 2009 at 11:46 pm

அது அப்படி யென்று சொல்ல ஏலாது. சிலருக்கு சோகம் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அதன் வெளி பாடு தானே அக்கா இது எல்லாம்.

KannanSeptember 30th, 2009 at 1:41 am

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

Leave a comment

Your comment