உவர்நீர் மீன் தொட்டி!

Posted On மே 3, 2015

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்

Comments Dropped leave a response

This slideshow requires JavaScript.

(March 2015 இல் எழுதி, draft இல் போட்டு வைத்த ஒரு பதிவு  இது.)
வீடு புதிதாகியதில் ஏற்பட்ட மகிழ்வில், உவர்நீர் மீன் தொட்டி (Salt water aquarium) ஒன்று வாங்கி வைத்தாயிற்று. இதனை பவளப் பாறைகள் நீர்த்தொட்டி (Coral Reef aquarium) என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். முன்னர் நன்னீர் மீன் தொட்டி ஒன்று வைத்திருந்து, நாம் விடுமுறைக்குப் போய் வந்த ஒரு தருணத்தில், அனைத்து மீன்களும் இறந்த கவலையில், மீன் தொட்டி வேண்டாம் என்று விட்டு விட்டு இருந்தோம்.

அன்றொரு நாள் வீடும், அதிலுள்ள பொருட்களுக்கான கண்காட்சி ஒன்றுக்குப் போயிருந்தபோது, உவர்நீர் மீன் தொட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, அதனை வாங்கலாம் என்று முடிவெடுத்துப் பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு வாங்கியாயிற்று. வாங்கும்போது கூட, அந்த மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பது இத்தனை மகிழ்வாக இருக்குமென எண்ணியிருக்கவில்லை. ஆகா, என்ன அழகு, என்ன அழகு……

இந்தத் தொட்டியானது உயிர்ப் பாறைகளுடன் (Live Rocks) பல நிறங்களில், பல் வேறு வகையான பவளங்கள் (Corals), கடற் சாமந்திகள் (Sea anemones) என்பவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதற்குள் முதலில்  இறால் (shrimps) வகையைச் சேர்ந்த 3 உயிரினங்கள், 5 சிறிய நத்தைகள் (snails) , மற்றும் விண்மீன் உயிரியுடன் (star fish) நெருங்கிய தொடர்புடைய Brittle star என அழைக்கப்படும் ஒரு உயிரினம்  எல்லாம் முதலில் விடப்பட்டது.

Brittle star மண்ணிற, கறுப்புப் பட்டிகளாலான உடலையும், 5 மிக நீண்ட வெளிநீட்டங்களையும் கொண்டிருக்கின்றது. அவர் அனேகமாக கற்களின் கீழாகவே இருப்பதனால், அவரை முழுமையாகப் பார்ப்பது அபூர்வம். இடை இடையே வெளிநீட்டங்களை அங்கேயும் இங்கேயுமாகக் காணலாம். அரிதாகவே வெளியே வந்து கற்களின் மேல் படுத்திருப்பார்.

நத்தைகள் சிறியவையாகவும், கூரான ஓட்டை முகத்தில் சுமப்பனவாகவும் இருந்தன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறு பிரித்தறிய முடியவில்லையாதலால், ‘நந்து’கள் என்று பொதுவான ஒரு பெயரில் அழைத்தோம்.

இறால் வகையில் இரண்டு ஒரே மாதிரியான சிவப்பு நிற உயிரினங்கள். அவற்றுக்கு ‘Jack and Jill’ என்று பெயர் வைத்தோம். Jack உம் Jill உம் அனேகமான நேரங்களில் பாறைகளின் நடுவே ஒளிந்தபடியே இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் வெளியே வந்து போவார்கள். மூன்றாவது இறால் சிவப்பு வெள்ளை பட்டிகளைக் கொண்ட உடலையும், கால்களையும், மிகவும் நீண்ட உணர் கொம்புகளையும் கொண்டிருப்பதுடன், வெளிச்சம் போன பின்னர் மிகவும் உற்சாகத்துடன், சுறுசுறுப்பாக அங்குமிங்குமாக உலாவித் திரிபவராகவும் இருந்தார். அவர் உணவை எடுத்து உண்பதே பார்க்க அழகாக இருக்கும்.

பவளங்கள், கடற் சாமந்திகளும் மிகவும் அழகாக இருக்கின்றன. அவை வெளிச்சம் இருக்கையில் ஒரு தோற்றத்திலும், வெளிச்சம் போனதும் வேறொரு தோற்றத்துக்கு மாறுவனவாகவும் உள்ளன. சில சடுதியான மாற்றங்களுக்கு, சில தொடுகைகளுக்கு, தமது உணர் கொம்புகளை குழாய்ப் பகுதிக்குள் சடுதியாக உள்ளே இழுப்பதும், சில நேரங்களில் மெதுவாக உள்ளே இழுப்பதும், வெளியே வருவதும், சுருங்கிக் கொள்வதும், விரிந்து வருவதும் என்று பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது.

ஒரு கிழமையின் பின்னர் பாசிகளை உணவாகக் கொண்டு மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவும் குட்டி நண்டு (crab) ஒன்றும், குட்டி மீன் ஒன்றும் விடப்பட்டது. நண்டுக்கு ‘முத்து’ என்றும், குட்டி மீனுக்கு ‘ராமு’ என்றும் பெயரிடப்பட்டது. நண்டு மிகவும் சுறுசுறுப்பாக தானும் உணவை உண்டு, தொட்டியையும் சுத்தம் செய்து கொண்டு திரிகின்றார்.
…………………………………………
May 2015 இல் தொடர்ந்து எழுதுவது….

அதன் பின்னர் Clown fish இரண்டு வாங்கி விட்டோம். அவைக்கு ‘பாலு’, ‘மணி’ என்ற பெயர்கள் இடப்பட்டன. எம்மிடமிருந்த இரு முயல்களின் நினைவாக இந்தப் பெயர் :). பின்னர் இன்னுமொரு நண்டு வாங்கி, அதற்கு ‘சுப்பு’ என்று பெயர் வைத்தோம். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக இரு மீன்கள் வாங்கி விட்டிருக்கின்றோம். அழகான நீலம், மஞ்சள் கலந்த மீனுக்குப் பெயர் ‘கீது’, வெள்ளை கலந்த மஞ்சள் நிறமும், ஒரு கறுப்புப் புள்ளியும் (beauty dot) கொண்டமீனுக்கு ‘மீனு’.

நத்தைகள் ஒவ்வொன்றாய்க் காணாமல் போயின. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. அதேபோல் சிறிய இரு இறால்களும் காணாமல் போயின. மீண்டும் இரு நத்தைகள் கொண்டு வந்து விட்டோம். அப்போதுதான் தெரிந்தது, அவற்றையெல்லாம் கபளீகரம் செய்தது நண்டுகளில் ஒன்றுதான் என்று. அவர் பருமனில் கூடிச் செல்லும்போது, தனக்குப் புது ஓடு தேடி இந்த வேலையைச் செய்கின்றாராம். எனவே அவருக்கு ஒரு பெரிய ஓடு கொண்டு வந்து போட்டோம். மிக இலகுவாக ஒரு ஓட்டிலிருந்து வெளிவந்து, அடுத்த ஓட்டிற்குள் தன்னை நுழைத்துக் கொள்வார்.

புதிய கடற்சாமந்திகள் தோன்றும். சில அழிந்துபோகும். இப்படியே ஏதாவது மாற்றங்களுடன், எமது மீன்தொட்டிச் சூழல் போய்க் கொண்டிருக்கின்றது.

பின்னூட்டமொன்றை இடுக