கவிதையும், கட்டகாடும்!

Posted On ஒக்ரோபர் 23, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

பல நாட்கள் முன்னர், ஏதோ ஒரு TV Channel இல் டைரக்டர் பார்த்தீபனிடம், “உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை சொல்லுங்க” என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்ன கவிதை…… (என்னுடைய வார்த்தைகள் சிலவேளை மாறியிருக்கலாம். ஆனால் கவிதையின் அர்த்தம் கீழுள்ள மாதிரித்தான் இருந்தது).

“சுற்றி இத்தனை முட்களிருந்தும்,

பூக்கள் எப்படி இத்தனை அழகாக சிரிக்கின்றன”.

எனக்கு இதனைக் கேட்ட மறுகணம், சில மாதம் முன்னர் நான் சந்தித்த கட்டக்காட்டைச் சேர்ந்த மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். போரின் அகோரத்தை நேரில் சந்தித்து, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் கடந்து வந்து, எதிர்கால வாழ்க்கையின் நிச்சயமில்லா தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்கள் முகத்தில் தெரிந்த வெகுளித்தனமான சிரிப்பு, புன்னகை, உபசரிக்கும் பண்பு…… ம்ம்ம்ம்ம்.

போரின் பின்னர் இத்தனை காலமும் முகாமில் தங்கியிருந்த அவர்களை, திடீரென வந்த தேர்தலுக்கு முன்னால் மீளக் குடியமர்த்தியுள்ளார்கள். கட்டக்காடு என்ற இடம், இலங்கையின் முக்கிய நிலப்பரப்பை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கழுத்துப் பகுதில், கண்டிவீதியில் இருக்கும் இயக்கச்சி சந்தியிலிருந்து இந்தியப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் பாதையின் முடிவில் கடலுக்கு அண்மையாக இருக்கும் இடம். தமது சொந்த இடத்துக்கு வந்து விட்டாலும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அங்கே இருக்கின்றார்கள். ஆனாலும், முகத்தில் சிரிப்பு இருக்கின்றது. எப்படி முடிகின்றது என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

மரத்தின் கீழ் ஒரு கூடாரம், சில சட்டி, பானைகள், சில துணிமணிகள், அங்கேயே இருந்த சில ஆடுகள், குட்டிகள். இவ்வளவுதான். ஒரு சிலர் சிலரின் உதவி பெற்று சிறு குடிசைகள் போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். மலசலகூடம், குடி தண்ணீர் வசதிகள்கூட இல்லாமலும் இருக்கின்றார்கள்.

This slideshow requires JavaScript.

இதில் தொடர்பற்ற ஒரு கிளைக்கதை. இங்கே எழுதக் காரணம், கட்டக்காடு போகும்போது நிகழ்ந்த நிகழ்ச்சி என்பதுதான். போகும் வழியில் ஒரு சின்ன பெட்டிக்கடை. கடைக்காரரும் கொஞ்சம் ஏழ்மையில் இருக்கக் கூடியவர்தான் எனத் தெரிந்தது. ஏதோ பொருள் ஒன்று வாங்கி விட்டு, மிகுதி சில்லறை இல்லை என்றதும், தன்னிடம் இருந்த தர வேண்டிய பணத்தை விட அதிக பெறுமதியான தாள் ஒன்றை எடுத்து, “என்னிடம் சில்லறை இல்லை. இதை எடுத்துச் செல்லுங்கள்” என்று நீட்டுகின்றார். நாங்களே, “இல்லை, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டி இருந்தது. பணம் அதிகம் இருப்பவர்களுக்குத்தான் அதை கொடுக்க மனம் வருவதில்லைப் போலும். இல்லாதவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள் போலும் எனத் தோன்றியது. சில (அல்லது பல), கொஞ்சம் பெரிய கடைகளில்கூட சில்லறை இல்லையென்று சொல்லி, தேவையா, தேவையில்லையா என்ற கேள்வியே இன்றி, சின்ன இனிப்பு போன்ற எதையாவது தூக்கிக் கொடுப்பார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக