தற்கால மனிதன் – 16

Posted On ஜூன் 27, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

எமது டீ.என்.ஏ. இப்போதும் நாம் வெப்ப மண்டலப் புல்வெளியிலோ, காட்டிலோ வாழ்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறது 😃.

எமது இனமானது எப்போதும் உணவுதேடும் இனமாகவே (foragers) இருந்து வந்திருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் நகர்ப்புறத் தொழிலாளர்களினதும், அலுவலக ஊழியர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருக்கிறது. அதற்கு முந்தைய 10000 ஆண்டுகள் நம் இனத்தின் அநேகமானோர் வேளாண்மை செய்பவர்களாகவும் (farmers), மேய்ப்பர்களாகவும் (herders) இருந்தார்கள். ஆனாலும் அதற்கும் முந்தைய பல்லாயிரம் ஆண்டுகளாக நம் இனத்தவர் வேட்டையாடுபவர்களாகவும் (hunters), உணவு சேகரிப்பவர்களாகவுமே (gatherers) இருந்து வந்துள்ளனர். எனவே நம் இனத்தின் வரலாற்றில் மிக மிக நீண்ட காலமாக நாம் உணவு சேகரிப்பவர்களாகவே இருந்து வந்துள்ளோம்.

அதனால் நமது தற்போதைய சமூக, உளவியல் இயல்புகள் யாவும் வேளாண்மைக் காலத்திற்கு முந்தைய காலத்தாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரிணாம உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போதும் நமது மூளையும், மனமும் ஆதிகாலத்து வேட்டையாடும், உணவு சேகரிக்கும் மனிதர்களின் வாழ்க்கையைத் தழுவியே அமைந்திருக்கின்றது என்கின்றனர்.

இதற்கான ஒரு எடுத்துக்காட்டு, நம்மவர்கள் உயர் கலோரி உணவுகளை நாடுவது. அதனால்தானே கட்டுக்கு மீறிய உடற்பருமன் (obesity) உட்பட, பல்வேறு நோய்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். அது எப்படி இது ஆதிமனிதனின் வாழ்க்கையைத் தழுவி அமைந்திருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? 30000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுக்கு பழங்கள் மட்டுமே உயர் கலோரி இனிப்பு உணவாக இருந்திருக்கும். எனவே ஒரு ஆதி மனிதன் எங்காவது பழமரத்தைக் கண்டால், ஏனைய குரங்கினங்கள் போட்டிக்கு வர முன்னர், அந்த இடத்திலேயே தன்னால் முடிந்தளவு உடனேயே பறித்து உண்டு விடுவான். ஏனென்றால் மரத்திலிருக்கும் பழம் முழுவதையும் பறித்து எடுத்துச் செல்ல வழியிருந்திருக்காது. (லொறியில் போட்டா கொண்டு போக முடியும்?) ஆனால் இப்போது எத்தனை எத்தனை உயர் கலோரி உணவுகள் (ஐஸ் கிரீமென்ன, சொக்கிளேற்றென்ன, கோக்கோகோலா போன்ற உயர் கலோரி பானங்களென்ன) இலகுவாகக் கிடைத்தாலும், ஆதி மனிதனின் மனநிலையிலேயே அவற்றையெல்லாம் வாங்கி குளிர்சாதனப் பெட்டிகளை நிரப்பி, பின்னர் அவற்றைக் கொண்டு வயிற்றையும் நிரப்பி, வருத்தத்தையும் தேடி எத்தனை பாடு. ஆதி மனிதன் அரிதாகக் கிடைக்கும் உயர் கலோரி உணவை கிடைக்கும்போது உண்டான். அது அவனுக்குத் தேவையும்கூட. ஆனால் நாம்? அந்த இயல்பு நமது மரபணுவில் பதிந்து இருப்பதனால்தானோ என்னவோ, நகர வாழ்வில் இருந்தாலும், இன்னமும் ஏதோ வெப்ப மண்டல புல் வெளியிலோ, காட்டிலோ வாழ்வது போன்ற நினைப்பில் நாம் உயர் கலோரி உணவை அளவுக்கு அதிகமாக உண்கிறோம்.

தற்கால மனிதன் – 15

Posted On ஜூன் 16, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

படைப்பின் எசமானர்கள்?

தற்கால மனிதன் கண்டுபிடித்த கற்பனை நிதர்சனங்களின் (imagined realities) பெரிய அளவிலான பன்முகத்தன்மை, அதனால் ஏற்பட்ட மனித நடத்தை முறைகளின் பன்முகத்தன்மை ஆகியவை கலாச்சாரங்களின் முக்கிய கூறுகளாகும். கலாச்சாரங்கள் மாறும்போதும் மேம்படுத்தப்படும்போதும் அது வரலாறு ஆகிறது.

முன்னர் உயிரியலை வைத்தே தற்கால மனிதனின் விருத்திக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வந்தது. அறிவுப் புரட்சி ஏற்பட்டபோது வரலாறு பற்றிய கதைகள் ஆரம்பித்துவிட்டன. ஒரு மதம் உருவானது பற்றியோ, ஒரு புரட்சி ஏற்பட்டது பற்றியோ அறிய, மரபணு பற்றியும், ஓமோன்கள் பற்றியும், உயிர்கள் பற்றியும் கொடுக்கப்படும் உயிரியல் விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே ‘வரலாறு’ எனும் தனிப்பாதை ஆரம்பித்தது.

ஒரு தனி மனிதனின், அல்லது ஒரு சிறு குழுவின் நடத்தையை உயிரியலால் விளக்க முடியும். ஆனால் அந்தக் குழுவின் எண்ணிக்கை 150 என்னும் வரம்பை மீறும்போது பெரிய மாற்றம் நிகழ்கிறது. ஒரு ஆயிரம் மனிதக் குரங்குகளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் கட்டடத்திற்குள் விட்டால் பெரிய அமளி துமளி ஆகி விடுமல்லவா? ஆனால் மனிதர்களால் இதைவிடப் பெரிய எண்ணிக்கையில் அமைதியாகக் கூட்டம் கூட முடிகிறது. காரணம் தற்கால மனிதனை மதம், வணிகம், அரசியல் என்று பல விதமான கற்பனை நிதர்சனங்கள் பசை போட்டு ஒட்டிப் பிணைத்து வைத்திருக்கிறது.

300000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை வெறும் ஈட்டி முனையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்த மனிதன் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து விளையாட ஆரம்பித்திருக்கிறான். ஒரு நவீன அணு ஆயுத உற்பத்திக்கு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான அந்நியர்களின் ஒத்துழைப்பு உதவுகிறது. யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிலிருந்து, தத்துவார்த்த இயற்பியலாளர்கள் (theoritical physicist) வரை பலரும் அதில் பங்களிக்கிறார்கள்.

மனிதர்கள் மிகப் பெரிய குழுக்களாக ஒன்றிணைந்து, வர்த்தக வலைப்பின்னல்கள், பெரிய கொண்டாட்டங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்கிறார்கள். மனிதனின் கற்பனை மிகப் பெரிய எண்ணிக்கையில் மனிதர்களை ஒன்றாக இணைத்து அவர்களைப் படைப்பின் எசமானர்களாக ஆக்கியுள்ளது.

தற்கால மனிதன் – 14

Posted On ஜூன் 14, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

நம்பிக்கை மனிதனைப் பிணைத்த முக்கிய கருவி!

மற்ற மனித இனங்களில் வர்த்தகத் தொடர்புகள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய மையப்பகுதியில் 30000 ஆண்டுகள் பழமையான தற்கால மனிதர்களின் வாழ்விடம் ஒன்றைக் கண்டறிந்தனர். அவர்கள் அவ்விடத்தில், மத்தியதரைக் கடல் மற்றும் அட்லாண்டிக் கடலில் இருக்கும் கடற்சிப்பியின் ஓடுகளைக் கண்டெடுத்தனர். இவை தொலைதூர வர்த்தகம் காரணமாகவே குறிப்பிட்ட அவ்விடத்திற்கு வந்திருக்க முடியும். அவர்கள் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருக்கலாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த நியாண்டதால் மனிதர்களின் இடத்தில் இவ்வாறான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நியாண்டதால் மனிதர்களில் ஒவ்வொரு குழுவும் தமக்குக் கிடைக்கும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான கருவிகளைத் தாமே தயாரித்திருக்க வேண்டும்.

தற்கால மனிதன் இடம் விட்டு இடம்போய் வர்த்தகத்தை ஆரம்பித்தான் என்றால், ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிமாற்றங்கள் நடந்திருக்க முடியும்.

தற்கால மனிதன் – 13

Posted On ஜூன் 10, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

விரைவுச்சாலையில் (Fast Lane) எமது பயணம்!

கலாச்சார பரிணாம வளர்ச்சி என்னும் விரைவுச்சாலையைப் பிடித்து குறுக்குவழியில் எப்படி முன்னேறினோம்?

தற்கால மனிதர்கள் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, பொருத்தமான சூழ்நிலையில், விரைவாக தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.

பழங்கால மனிதர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பெரிய மாற்றமெதுவும் இன்றி வாழ்ந்தார்கள். எ.கா. கல்லினாலான கருவிகள் மில்லியன் ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. ஆனால் அறிவுப் புரட்சியின் பின்னர் மனிதர்கள் தங்கள் சமூக கட்டமைப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒவ்வொரு தசாப்தங்களுக்கும் குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். மிக வேகமாக மாற்றங்களைச் செய்கின்றனர் (இன்னும் சொல்லப்போனால், நாளுக்கு நாள் கூட புதிய மாற்றங்கள் நிகழ்கிறது. எமது வாழ்க்கைக் காலத்தை வைத்தே இதனை நாம் உணரலாம்). தொடர்புப் பரிமாற்றத்திற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தோம்… அவசரத்திற்குத் தந்தி அடித்தோம். பின்னர் தொலைபேசிகள் வந்தன… பின்னர் மின்னஞ்சல்கள் விரைவான தொடர்புப் பரிமாற்றத்தில் உதவியது. முதன் முதல் மாமாவிற்கு நான் மின்னஞ்சல் அனுப்பியதும், அடுத்த சில நிமிடங்களில் மாமாவிடமிருந்து பதில் வந்ததும் எப்படியொரு மகிழ்ச்சியைத் தந்தது என்பது இப்போதும் நினைவில் உள்ளது. பின்னர் இணைய இணைப்பு… இப்போது இணைய இணைப்புடன் கூடிய கைத்தொலைபேசி அனேகமாக அனைவரின் கைகளிலும்…. அது மட்டுமா? Whatsapp, Viber, Messenger, Instagram, Snapchat என்று சமூக ஊடகங்கள் எத்தனை விரைவான தொடர்புப் பரிமாற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. (Good morning, good night, சாப்பிட்டீங்களா, இண்டைக்கு மத்தியானம்
என்ன சாப்பாடு etc etc என்று சின்னச் சின்ன விடயங்களைக்கூட அன்புக்குரியவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொண்டு, எந்த நேரமும் கேட்க முடிகிறது. முகம் பார்த்துப் பேச முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் ஒன்றாக group video call போட்டு மணிக்கணக்கில் கதைக்க முடிகிறது 😃. கணினியின் வளர்ச்சியில் மிகக் குறுகிய காலத்தில், எத்தனை பெரிய வளர்ச்சி… மேசைக் கணினி.. மடிக் கணினி.. கையடக்கக் கணினி.. கைக்கடிகாரக் கணினி… ).

கலாச்சார மாற்றம் எவ்வளவு விரைவாக தற்கால மனித இனத்தை மாற்றி வருகிறது என்பதற்கு நூலாசிரியர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுத் தருகிறார்.

ஜேர்மனியில் பேர்லினில் 1900 ஆண்டு பிறந்த ஒரு பெண் 100 வயதுவரை வாழ்ந்திருந்தால்….

பிறந்து வில்ஹெல்ம் II பேரரசின் (Empire) கீழ் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்து, வீமர் குடியரசில் (Republic) தனது இளம்பெண் பருவத்தைக் கடந்து, பின்னர் நாஜி மூன்றாம் ரைச் (Nazi third Reich) இலும், கம்யூனிஸ்ட் கிழக்கு ஜெர்மனியிலும் (Communist East Germany) வாழ்ந்து, ஜனநாயக ஐக்கிய ஜெர்மனியின் (Democratic and reunified) குடியுரிமை உள்ளவராகத் தன் உயிரைத் துறந்திருப்பார்.

மில்லியன் ஆண்டுகளாக நிகழாதிருந்த மாற்றம் ஒரு சில நூற்றாண்டுகளிலேயே நிகழக் காரணம் கலாச்சார மாற்றம். கலாச்சார மாற்றம் என்பதே தற்கால மனிதனின் விரைவுச் சாலை எனலாம்.

தற்கால மனிதன் – 12

Posted On ஜூன் 7, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

குறுக்கு வழி (Shortcut)!

பிற விலங்குகள் அல்லது தொன்மையான மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களில் மரபணுக்களே (gene) முக்கிய பங்கு வகித்தன. ஆனாலும் இந்த மரபணுக்களைத் தன்னகத்தே கொண்ட டீ.என்.ஏ.க்கள் பெரிய எதேச்சாதிகார வேலையெல்லாம் காட்டாமல் சுற்றுச்சூழல் காரணிகளுக்கும் இத்தகைய மாற்றங்களில் பங்கெடுக்க வாய்ப்பளித்தது. ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு குறிப்பிட்ட இன விலங்குகள் ஒத்த நடத்தையைக் கொண்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மனிதக் குரங்குகள் (Common Chimpanzee) இனத்தின் குழுவில் படிநிலைகள் காணப்படுவதுடன் alpha male எனப்படும் ஒரு ஆணே குழுவிற்குத் தலைமை தாங்கும். இவற்றின் நெருங்கிய இனமான குள்ள மனிதக் குரங்கு (Bonobo) இனத்தின் குழுவில் ஒரு சமத்துவ நிலை பேணப்படுவதுடன் பெண்களின் கூட்டணியே குழுவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. மனிதக் குரங்கு இனத்திலுள்ள பெண்கள், குள்ள மனிதக் குரங்கு இனத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பெண்ணியப் புரட்சியை மேற்கொள்ளவில்லை. அந்த இனத்தின் ஆண்கள், கூட்டம் போட்டு, எமக்கு alpha male வேண்டாம், குழுவில் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் எதுவும் செய்யவும் இல்லை.

இது போலவே தொன்மையான மனிதர்களும் புரட்சிகளின்றி, பெரிய மாற்றங்கள் இன்றி மிக நீண்ட காலம் (2 மில்லியன் ஆண்டுகள் வரை) வாழ்ந்து விட்டார்கள். ஆனால் தற்கால மனிதர்களில் ஏற்பட்ட பரிணாம மாற்றத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மனிதர்களின் கலாச்சார பரிணாமமானது
இருக்கிறது. அதாவது நேர்வழியான மரபணு / சூழல் மாற்றங்களால் ஏற்படும் பரிணாம வளர்ச்சியிலிருந்து, விலகி, கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி எனும் குறுக்குவழியில் இறங்கி விரைவாக ஏனைய உயிரினங்களைக் கடந்து வந்து விட்டோம்.
இத்தகைய கலாச்சார மாற்றங்களாலேயே மனிதர்கள் திறமையுடன் கூட்டாக இணைந்து ஒத்துழைக்கிறார்கள்.

இயற்கை தேர்வுக்கு எதிராகவும் மனிதர்களில் மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக இனப்பெருக்கம் உயிரினங்களில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், கத்தோலிக்கப் பாதிரியார்கள் மத நம்பிக்கை என்னும் கலாச்சார முறை காரணமாகவே திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அதற்கு மரபணு மாற்றமோ அல்லது சுற்றுச்சூழலோ காரணம் அல்ல. (தற்போது பல இளம் தலைமுறையினர் திருமணம் அவசியமில்லை, குழந்தைகளைப் பெறுவது முக்கியமில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதுவும் ஒரு கலாச்சார மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுதானே?)

மரபியல் பரிணாம வளர்ச்சியின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நாம் கலாச்சார பரிணாமம் என்னும் குறுக்கு வழியில் முன்னேறி வந்துவிட்டோம்