பழைய நினைவுகள்!

Posted On செப்ரெம்பர் 28, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

கேரதீவு – சங்குப்பிட்டி பாதை இப்போது இப்படி (படங்களில்) உள்ளது. பாதை எனப்படும ferry ஓடிய இடத்தில் இப்போது பாலம். சூரியத் தகடுகளால் ஆற்றல் பெற்று ஒளியூட்டம் பெறும் பாதை.

போர்க் காலத்தில் இதே பாதையில், துவிச்சக்கரவண்டியில் பல தடவைகள் பயணம் செய்து வேலை செய்த இடமான கிளிநொச்சி, வட்டக்கச்சி போயிருக்கிறோம். பொதுவாக இரவு நேரங்களில்தான் பயணம். பயணத்தின் இடையில் பூநகரியில், மரங்களின் கீழ் நிலத்தில் துணி விரித்துத் தூங்கியது, நீண்ட நேர துவிச்சக்கர வண்டிப் பயணத்தில் (பல மணித்தியாலங்கள்) கால் வலிக்கும் என்பதால் முதலிலேயே paracetamol போட்டுவிட்டு ஓடத் தொடங்குவது, மேலே சூடுகள் தொடங்கினால், துவிச்சக்கர வண்டியை ஒரு புறம் எறிந்துவிட்டு நடுப் பாதையிலேயே விழுந்து படுப்பது என்று பல நினைவுகள்.

இந்தப் பாதை மட்டுமா? கொம்படி, கிளாலி, ஆனையிறவு படைத்தளத்தை ஒட்டி ஊரியான் என்று எத்தனை பாதைகளூடான பயணங்கள் அவை.

ஊரியானூடான பயணங்கள் பரபரப்பானவை. மழைக் காலத்தில் தண்ணீர் இருக்கும் நேரங்களில் வள்ளத்தில் பயணம். தண்ணீர் இல்லாத நேரத்தில் அதே பாதையில் துவிச்சக்கர வண்டி மிதிப்போம். ஆனையிறவு படைத்தளத்திற்கு அண்மையாகச் செல்லும் பாதை என்பதால் ஆபத்தானதாகவும், சிலிர்ப்பூட்டுவதாகவும் இருந்ததுண்டு. வள்ளத்தால் இறங்கி சிறிது தூரம் புதை சேற்றில் நடக்கையில் கால் புதைந்து போவதும், பக்கத்தில் போகிறவர்கள் இழுத்தெடுக்கும் முயற்சியில், அவர்கள் கால்களும் புதைவதுமாக அல்லோல கல்லோலம். தண்ணீர் இல்லாக் காலத்தில் எதிர்க் காற்றில் துவிச்சக்கர வண்டியை மிதிக்க முடியாமல் கஷ்டப்பட்டு உளக்கி, முடியாமல் இறங்கி உருட்டுவது, உப்புக் காற்றின் தாக்கத்தால் நா வரண்டு, தலை சுற்றிப் போவது… இப்படி எத்தனை…

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு துவிச்சக்கர வண்டிப் பயணம். ஏதோ ஒரு பாடசாலையில் தூங்கி, யாரோ ஒருவர் வீட்டில் தங்கி என்று பல ஞாபகங்கள். பூந்தோட்டத்தில் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு, no-man zone வயல்களூடாக வவுனியாவுக்கு நடை. திரும்பி வரும்போது, அதே வயலில் crossfiring இல் மாட்டிக்கொண்டு, உயிர் தப்புவதற்காக விழுந்தெழும்பி ஓடிய ஓட்டம் எல்லாம் மறக்க முடியாத வடுக்கள்.