என்னோடு பாட்டு பாடுங்கள்!

Posted On செப்ரெம்பர் 20, 2008

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தொலைக்காட்சி, ரசித்தவை

Comments Dropped leave a response

எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.

ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.

Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.

இன்றைக்கு கலைஞர் TV ல ‘வேட்டையாடு விளையாடு’ படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.

முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். ‘காக்க காக்க’ படத்திலிருந்து, ‘தூது வருமா தூது வருமா’ பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.

நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. ‘எண்ணப்பறவை சிறகடித்து’ பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான ‘இளையநிலா பொழிகிறது’.

முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் ‘தூது வருமா தூது வருமா’ பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.

‘ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை’

பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. 🙂

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, ‘உயிரிலே எனது உயிரிலே’ பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், ‘பார்த்த முதல் நாளே’ பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல. 

வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் ‘இனி நீயும் மாயாவும் என் சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை. 

‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். 🙂