நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!

Posted On மார்ச் 24, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped 3 responses

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் வித்யா’ வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.

எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.

வாசிப்பு – The Zahir!

Posted On மார்ச் 1, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நூல், ரசித்தவை

Comments Dropped one response

Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட நூலை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.

அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாகவே ஒருவரிடம் இருக்கும் இயல்புகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

கதாசிரியர் அந்தக் கதையின் கதைசொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.

கதையில், காணாமல்போன (‘இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன’ என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். முடிவில் அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.

கதை முடிந்த பின்னர் ‘கதாசிரியர் குறிப்பு’ மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் இது எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்று எனலாம்.