கைத்தொலைபேசியும் தமிழும்!

Posted On மே 1, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped one response

எனக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் htc Hero mobile கிடைத்தது. ஆனால் அங்கே Unicode தெரியாமல் இருந்ததால், தமிழில் எதையும்  வாசிக்கவோ, எழுதவோ முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதை எப்படி என அறியும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தாலும், அதற்கான மனநிலை இல்லாமல் இருந்ததால் அதனைச் செய்யாமல் இருந்து விட்டேன்.

சில நாட்கள் முன்னால் அதனை எப்படியும் செய்ய வேண்டும் என முயற்சித்ததில், முதலில் Opera Mini browser ஐ பதிவிறக்கம் செய்து கொண்டதில் தமிழில் வாசிக்க முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்க முடிந்தபோது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பின்னர் ThamiZha’s Android TamilVisai 0.1 ஐயும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன். இன்றுதான் முதன் முதலில் எனது கைத்தொலைபேசியில் இருந்து முதலாவது தமிழ் மின்னஞ்சலை எழுதியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

Android Operative system இருக்கும் கைத்தொலைபேசி கிடைத்து கிட்டத்தட்ட 8 மாதங்களின் பின்னர் தமிழில் எழுதவும், வாசிக்கவும் தொடங்கியுள்ளேன்.

வாசிப்பு!

Posted On நவம்பர் 6, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped leave a response

எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது :(. நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.

பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை வாசிப்பது போதாதென்று, பொருட்கள் சுற்றி வரும் காகிதங்களையும் நான் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருக்கும் ஆச்சி சொல்லுவா, ”எனக்கு உன்னைப் பார்க்க பொறாமையாய் இருக்கு பிள்ளை” என்று. காரணம் அவவுக்கு வாசிக்க தெரியாது என்பதுதான்.

சரி, எதுக்கு இந்த முன்னோட்டம் இப்போ? திரு எழுதிய ‘திரை கடலோடியும் துயரம் தேடு’ வாசித்தேன். நிறைய தரவுகளுடன், ஆராய்ந்து புலம்பெயர் மக்களின் வாழ்வைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் வாசித்தபோதுதான், மக்களின் எத்தனை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம் என்று இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தனை தூரம் எத்தனையோ புலம்பெயர் மக்களுக்கு துன்பம் கொடுக்கிறது என்பது ஓரளவு எதிர் பாராதது. நமக்கு அந்த துன்பங்கள் நேராமையால், இதை எதிர் பார்க்கவில்லை போலும்.

ஏன் மக்கள் புலம் பெயர்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் புலம்பெயர்கிறவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அறிவுரைகளுடன் முடித்திருக்கிறார்.

இனி மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.

பதிவெழுத வந்த கதை!

Posted On செப்ரெம்பர் 19, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped 5 responses

சினேகிதி தத்தக்க பித்தக்க வில என்னையும் (நானும் ஒராளெண்டு) பதிவெழுத வந்த கதையை எழுதக் கூப்பிட்டிருக்கிறா. நானும் நாளைக் கடத்திப்போட்டன். இனியும் எழுதாமல் விட்டால், கனடாவில இருந்து நோர்வேக்கு தடியோட வந்து நிண்டாலும் நிப்பா போல கிடக்கு. வாறதுக்கிடையில எழுத வேணும் எண்டு நானும் எழுதத் தொடங்கி விட்டன். முந்தி ஒருக்கால் மழை ஷ்ரேயா இப்படித்தான் ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு, அந்த தொடர் விளையாட்டெல்லாம் முடிஞ்சு கன காலத்துக்குப் பிறகு நான் அந்தப் பதிவை எழுதினன். இந்த தொடர் விளையாட்டுல எல்லாரும் எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. பாப்பம்.

கணினியைப் பாத்ததும், பழகினதும்

நான் முதல் முதலில கணினியைப் பாத்தது, பேராதனைப் பல்கலைக் கழகத்தில கடைசி வருடப் படிப்பிலதான். அப்பதான் எங்களுக்கு ஒரு பாடம் கணினியில், கொஞ்சமா ஏதோ சொல்லிக் கொடுத்தாங்கள். ஏதோ கொஞ்சம் படிச்சிட்டு வந்தாச்சு. அதுக்குப் பிறகு, நான் அங்கேயே கொஞ்ச காலம் வேலை செய்தபோது, எங்களுக்கு senior ஆன, வெளிநாட்டு உதவித் தொகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, என்ரை அறைத் தோழிக்கு, தனிக் கணினி கிடைத்திருந்தது. அப்போது ஒரு நாள் “கணினி சாத்திரமெல்லாம் சொல்லுது, வாங்கோ பாப்பம்” எண்டு சொல்லி கூட்டிக் கொண்டு போய் காட்டினா. அதுக்குப் பிறகு இங்க நோர்வேக்கு வந்த பிறகுதான், வீட்டிலேயே கணினி பாவிக்கத் தொடங்கினது.  அப்பதான் தமிழிலயும் எழுதலாம் எண்டு தெரிஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா தட்டச்சு பழகினது. நான் தமிழ் எழுதத் தொடங்கினது ‘பாமினி’ யில்தான். எழுத்துக்களுக்குரிய விளக்கத்தை அச்சுப் பிரதி எடுத்து,  கையோட வைச்சுக் கொண்டு தட்டச்சினேன். முதன் முதல் நான் கணினியில் தமிழில தட்டச்சினது அப்பா, அம்மாக்கு கடிதம். அதை எழுதி, அச்சுப் பிரதி எடுத்து அஞ்சலில் அனுப்பினேன். அண்டைக்கு நல்ல மகிழ்ச்சியா இருந்தது இப்பவும் நல்லா நினைவிருக்கு.

அதுக்குப் பிறகு கணினியில் அரட்டை, இணையத் தமிழ் முற்றங்களில பங்களிப்பு, வலைப்பதிவு எண்டு எனக்கும், கணினிக்கும், இணையத்துக்குமான தொடர்பு நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமா வளர்ந்திட்டுது. இப்ப கடைசியா தமிழ் விக்கிபீடியா பங்களிப்புவரை கொண்டு வந்து விட்டிருக்கு :).

மின்னஞ்சல்

எப்ப முதன் முதலா மின்னஞ்சல் அனுப்பினன் எண்டு சரியா நினைவில்லாட்டியும், யாருக்கு அனுப்பினன் எண்டு நல்லா நினைவிருக்கு. துபாயில இருந்த மாமா (என்னை விட 2 வயதே கூடியவர்), தன்ரை மின்னஞ்சல் முகவரி எண்டு தந்திருந்தார். எனக்கும் இங்க பல்கலைக் கழகத்தில மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும், அதில இருந்து மாமாக்கு ஒரு மின்னஞ்சலைப் போட்டன். போட்டுட்டு கொஞ்ச நேரத்தில பாத்தால், அவரிட்ட இருந்து பதில். ஆச்சரியமும், மகிழ்ச்சியுமா இருந்துது. அட உலகம் இவ்வளவு சுருங்கியிட்டுதா எண்டு நினைச்சன். ஆனா அப்பெல்லாம் மின்னஞ்சல் ஆங்கிலத்துலதான் எழுத வேண்டியிருந்தது. அது எனக்கு ஏதோ குறையாயிருந்துது.

பிறகு சும்மா ஒருநாள் ஒரு அரட்டைப் பெட்டியுக்கை போய், யாரோ சிலரோட அரட்டை அடிக்கேக்கைதான் yahoo mail ப் பற்றி தெரிய வந்துது. சரி, எதுக்கும் இருக்கட்டுமெண்டு அதுலயும் ஒரு கணக்கை தொடங்கி வைச்சன். அப்ப அரட்டையெல்லாம் தமிங்கிலத்திலதான் தட்டச்சு செய்யுறது. அது வேற கரச்சலா இருந்துது. பிறகு தெரிஞ்சவை, தெரியாதவையெண்டு எல்லாரோடயும் அரட்டை பிடிக்காம, தெரிஞ்ச சிலரோட மட்டும் அரட்டை அடிப்பமே எண்டு MSN ஐத் தொடங்கிற எண்ணத்தில hotmail லயும் ஒரு கணக்கைத் தொடங்கினன். பிறகு Gmail க்கு ஆர் சொல்லி வந்தன், எப்படி வந்தனெண்டு தெரியேல்லை. ஆனா, மின்னஞ்சல் பரிமாற்றத்துக்கு, இப்ப மற்ற எல்லாத்தையும் விட்டுட்டு gmailலோடயே நிக்கிறன். Gmail தான் நல்லாப் பிடிச்சிருக்கு.

தமிழ் தட்டச்சு

2004 இல எண்டு நினைக்கிறன், நிலாமுற்றம் எண்ட ஒரு Tamil forum அறிமுகம் கிடைச்சுது. பிறகு யாழ்முற்றம் அறிமுகமும் கிடைச்சுது. அங்க எல்லாம் தமிழ்ல தட்டச்சலாம் என்பதே மகிழ்ச்சியைத் தந்தது. நிலா முற்றத்தில ஏற்கனவே நண்பர்கள் கிடைச்சிருந்ததால அங்கேயே நிண்டிட்டன். நிலா முற்றத்தில நிறைய எழுதத் தொடங்கினன். அங்க பட்டிமன்றம் எல்லாம் கூட நடந்துது. அப்பல்லாம் தொடர்ந்து பாமினியிலதான் தட்டச்சினனான். ஆனா கொஞ்சம் கெதியா தட்டச்ச பழகியிருந்ததால, அங்க நிறைய எழுதிக் கொண்டிருந்தன். அங்க கிடைச்ச ஒரு சினேகிதர் றெனிதான், ”இப்ப நீங்க தமிழ்லயே hotmail ல இருந்து  மின்னஞ்சல் செய்யலாம். அதுக்கு ஈகலப்பையை தரவிறக்கம் செய்யுங்கோ” எண்டு சொல்லித் தந்தார். மின்னஞ்சலில நேரடியா எழுதுறதுக்காக, ஈகலப்பையில் எழுதத் தொடங்கியதும், பாமினியை மறக்கத் தொடங்கிட்டன். ஈகலப்பை இலகுவாக இருந்ததுபோல இருந்தது.

பிறகு ரவி NHM writer பாவிச்சுப் பாக்கச் சொல்லி சொன்னதும், சரி அதையும் முயற்சி செய்வோமே எண்டு, அதையும் தரவிறக்கி பாவிக்கத் தொடங்கியிட்டன். அதில ஈகலப்பையை விட தெரிவுகள் கூட. தவிர ஈகலப்பையால, என்னால Microsoft word ல தமிழ் எழுத முடியாமல் இருந்தது. Notepad ல எழுதக் கூடியதாக இருந்தாலும், சில எழுத்துப் பிழைகள் வந்தது.ஆனால் NHM writer ஆல எல்லா இடமும் எழுதக் கூடியதா இருக்குது. இன்னொண்டையும் குறிப்பிட வேணும். முதல் NHM writer எல்லா இடமும் சரியாத்தான் வேலை செய்தது. ஆனால், இப்ப ஏனோ Internet Explorer ல gmail chat ல தமிழ் தட்டச்சும்போது எழுத்துக்கள் பிழையாக வருகுது. திடீரெண்டு என்ன நடந்ததெண்டு தெரியேல்லை. அதால நான் இப்ப Firefox browser ஐயே பாவிக்கத் தொடங்கிட்டன்.

ரவி என்னை தமிழ்99 பழகச் சொல்லி சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஏனோ நான் அதுக்குப் போகேல்லை. நேரமில்லாமையும், கிடைக்கிற நேரத்தில புதுசா தமிழ் எழுத்துப் படிக்க இருந்த கள்ளம்தான் காரணம் எண்டு நினைக்கிறன். பிறகு எப்படியும் தமிழ்99 சொல்லிக் கொடுத்தே தீருவது எண்டு ரவி முயற்சி செய்தபோதுதான், என்னட்டை இருக்கிற நோர்வேஜிய keyboard ல, அந்த முறையில தட்டச்சு செய்வது கொஞ்சம் சிரமமான வேலையெண்டு தெரிஞ்சுது. தப்பினன், பிழைச்சன் எண்டு நான் மகிழ்ச்சியா இருந்திட்டன். ஆனாலும், என்னட்டை யாராவது தமிழ் எழுத்துபற்றிக் கேட்டால் தமிழ்99 ஐ பரிந்துரை செய்யுறன் :).

வலைப்பதிவு

அப்பாடா, ஒரு மாதிரி கடைசியா நான் வலைப்பதிவு எழுத வந்த கதைக்கு வந்திட்டன் :).

என்ரை முதல் வலைப் பதிவு, rediffblog ல. அதை எனக்கு அறிமுகப்படுத்தினது திரு. ”ஏன் நீங்க எழுதக் கூடாது” எண்டு அவர் கேக்க, நானும் ”அதானே, நான் ஏன் எதையாவது எழுதக் கூடாது” எண்டு நினைக்க உருவாகினதுதான் என்ரை முதல் வலைப்பதிவு. இருங்க அது இப்பவும் இருக்கா எண்டு தேடிப் பாத்திட்டு வாறன்……………………………………………………….

இருக்கு இருக்கு :). ஆனா ஏன் அங்க ரெண்டு இருக்கெண்டு தெரியேல்லை. என்ரை முதல் பதிவு 10.11.2004. நிலா முற்றத்தில எழுதுறதெல்லாம், அங்க வெட்டி ஒட்டிக்கொண்டு இருந்தன். புதுசா எதையும் எழுதேல்லை :). அப்பவே எனக்கு சிலர் பின்னூட்டம் கூடப் போட்டிருக்கினம். ஆனா சில பின்னூட்டங்கள்ல தமிழ் எழுத்து வலைப் பதிவில தெரியேல்லை. எந்த தமிழ் எழுத்து பாவிச்சினமெண்டு தெரியேல்லை. அங்க நான் 21.05.2005 தான் என்ரை கடைசி இடுகையைப் போட்டிருக்கிறன்.

அதுக்கிடையில blogger பற்றி அறிஞ்சு, அங்க மாறிட்டன். அங்க ஒண்டுக்கு ஐந்து வலைப்பதிவு வைச்சிருந்தன் எண்டால் பாருங்கோவன் :). அங்க, பல வலைப்பதிவை, ஒரே கணக்கில இருந்து கட்டுப்படுத்தலாம் எண்டதை கண்டதும், ஒவ்வொரு இடுகையையும் தரம் பிரிச்சு, வெவ்வேற வலைப் பதிவாப் போட்டுட்டன். ஏதோ எழுதிக் கிழிக்கிற திறத்திலை, எனக்கு ஒரு கூடை வலைப் பதிவுகள் :). அப்படியே rediffblog ல இருந்ததையும் இங்க வெட்டி ஒட்டிப் போட்டு, blogger ல மட்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கினன். Blogger ல இருக்கேக்கைதான், வார்ப்புருவில மாற்றங்கள் எப்படி செய்யலாம் எண்டெல்லாம் சிலரிட்டை கேட்டும், நானாவே நோண்டி நோண்டியும் கண்டு பிடிச்சன். HTML எண்டாலே என்னெண்டு தெரியாம இருந்த நான், நானா எதையாவது மாத்தி மாத்தி போட்டுப் பாத்து, அது சரி வந்தபோது, நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை :).

இந்த கால கட்டத்திலதான் மழை ஷ்ரேயா ஒருநாள் எனக்கு(ம்) வலைப்பதிவு இருக்கெண்டு தெரியாமல், ”ஏன் நீங்க ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதக் கூடாது” எண்டு கேட்டா. நான் ஏற்கனவே இருக்கெண்டு சொல்லி அவவுக்கு காட்டினன். பிறகு என்ரை குட்டித் தேவதைக்கும் ஒண்டை தொடங்கிக் கொடுக்கச் சொன்னா. நான் இழுத்தடிச்சுக் கொண்டிருந்தன். அவ, இது சரிவராதெண்டிட்டு, அவவாவே ஒரு கணக்கை ஆரம்பிச்சுட்டு அனுப்பியிருந்தா. இதுக்குப் பிறகும் சும்மா இருந்தா மரியாதையில்லையெண்டு சொல்லி, அதை மகளுக்கும் காட்டி, அறிமுகப் படுத்தி, அங்க மகள் சொல்லுறதெல்லாம் எழுதிப் போடத் தொடங்கிட்டன். சொன்னா நம்புவீங்களோ தெரியேல்லை, என்ரை குட்டித் தேவதையின்ரை இந்த குட்டித் தோட்டத்தின்ரை banner நானே செய்து போட்டதாக்கும் :).

பொன்ஸ் உம் சில தொழில்நுட்ப விடயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க.

பிறகு ரவிதான் ”அக்கா, wordpress blog தான் நல்லது, நிறைய அனுகூலங்கள்” எண்டு சொன்னார். ”ஐயோ, பிறகு என்ரை blogger ல இருந்து ஆர் அதையெல்லாம் வெட்டி ஒட்டுறது” எண்டு நான் பயப்பிட, ”பயமே வேணாம். ஒரு அழுத்து அழுத்தினா போதுங்கா, அங்க blogger ல இருக்கிறது எல்லாம், இங்க கொண்டோடி வந்து போடும்” எண்டு, பயம் தெளிய வைச்சு, wordpress வலைப் பதிவுக்கு அத்திவாரம் போட்டார். ரவி நிறைய விதத்துல உதவியிருக்கிறார். அப்படியே என் குட்டித் தேவதைக்கும் அங்கே ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சுக் கொடுத்திட்டன்.

பிறகு ரவிதான் ”ஏன் நீங்க ஒரு சொந்த வலைப்பதிவு வைச்சிருக்கக் கூடாது?” என்று ஆசை காட்டி, இந்த வலைப்பதிவை போட்டுக் கொடுத்தார். kalaiarasy.com எண்டு பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா எழுதவெல்லோ வேணும்.

தற்போதைய நிலை 😦

ஆனா என்ன ஒண்டு, நானும் சரி, என் செல்ல குட்டி மகளும்சரி எழுதுறது நல்லாவே குறைஞ்சிட்டுது. அவளுடைய சில ஒலி, ஒளிப் பதிவுகளை நான் எடுத்துப் போடுறதோட சரி. இதையெல்லாம் போட சயந்தனும் உதவி செய்திருக்கிறார். (அவள் பியானோ வாசிக்கும்போது ஒளிப்பதிவு செய்து ஒரு இடுகை, அவளுடைய வலைப்பதிவில கெதியாப் போட நினைச்சிருக்கிறன். அவளின்ரை இடுகைகளைப் பார்த்து, மலைநாடான் ஒரு தடவை அவரது ஐரோப்பிய தமிழ் வானொலிக்கு ‘இணையத்தில் இன்பத் தமிழ்’ நிகழ்ச்சிக்கு அவளைப் பேட்டி எடுத்தார். அவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியேல்லை. வலைப் பதிவெழுத வந்ததில் எனக்கு கிடைத்த மிகவும் மகிழ்ச்சி தந்த விடயங்களில் அதுவும் ஒன்று.

அட, நானும் சிலருக்கு வலைப்பதிவு என்ன, எப்படி எழுதுவது, அதில சில முன்னேற்றங்கள் எப்படி செய்வது எண்டெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறன் எண்டு சொன்னால் நம்புவீங்களா? 🙂 எனக்கு நன்றியெல்லாம் கூட சொல்லியிருக்கிறாங்க ஒரு நண்பி.

தவிர இணையத்திலும், இந்த வலைப்பதிவு எழுத வந்ததாலும் எத்தனையோ நல்ல நண்பர்கள். இணையத்தில் கிடைத்து, வெறும் இணைய நட்புடன் நிற்காமல், நிலைத்த உறவுகளாய் சிலர். முகம் தெரியாமல் உதவி செய்த சிலர். இப்படி மகிழ்ச்சியடைய நிறைய………

பதிவெழுத வந்தது மொத்தத்தில் மகிழ்ச்சிதான். 🙂

(அப்பாடா, ஒரே மூச்சில இருந்து, நேரடியா வலைப்பதிவில எழுதி முடிச்சாச்சு. எழுதுற ருசியில, இடையில save பண்ணக் கூட இல்லை. நல்ல வேளை இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டு எழுதினது அழிபடேல்லை :). )

எழுதி முடிச்சாலும், சினேகிதி சொன்ன விதிகளை விட்டுட்டுப் போகேலாமலெல்லோ இருக்கு. ம்ம்ம். இந்தளவில எல்லாரும் இந்த இடுகையை எழுதி முடிச்சிட்டினமா எண்டு தெரியேல்லை. அதால ஆரைக் கூப்பிடுறதெண்டு தெரியேல்லை. திருவிட்ட இதைச் சொல்ல, முதலே சொல்லிட்டார், தன்னை கூப்பிட வேண்டாமெண்டு. எதுக்கும் இனி யாரிட்டையும் சொல்லாம மூண்டு நாலு பேரைக் கூப்பிடுவமெண்டு பாக்கிறன்.

1. மழை ஷ்ரேயா

2. நெய்தற்கரை மலைநாடான்

3. சாரல் சயந்தன்

4. காற்றோடு சோமீதரன்

(இன்னும் எழுதேல்லையெண்டால்), தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கோ என்று கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன் கலை

பி.கு: அடடே, ஒண்டை சொல்ல மறந்து போனன். இருங்கோ சினேகிதியின்ரை இடுகையில போய் வெட்டிக் கொண்டு வாறன். அப்படியே இங்க ஒட்டி விடலாம். வேறென்ன, அந்த விதி முறைகள்தான் :).

உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ 🙂

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட 🙂 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

பகிர்ந்துகொள்வதற்கு சில!

Posted On செப்ரெம்பர் 18, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்

Comments Dropped 3 responses

1. கனவு!

என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு :). என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது எப்படி எனக்குன்னு பாத்து இப்படி கனவுகள் வருது??

மேலும் எனது கனவுகளைப் பார்க்க விரும்பினால்?  இன்றைய கனவு, வெறும் கனவா, எனது விசித்திரங்கள்.

2. ராசி பலன்!

ஏதோ ஒரு தொலைக்காட்சியில், தினமும் காலையில், யாரோ ஒருவர் ‘இன்றைய ராசி பலன்’ சொல்கிறார். காலையில் தொலைக்காட்சியை வீட்டுப் பெரியவர் போட்டு விடுவார். காலையில் மகளை பாடசாலைக்கு தயார்ப்படுத்தி, வேலைக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது, இந்த ராசிபலன்கள் காதில் விழும். எந்த ராசிக்கு என்ன பலன் என்று கேட்கா விட்டாலும் (அதில் ஆர்வமோ இல்லாததால்), அவர் சொல்லும் பலன்கள் காதில் விழும். இன்றைக்கு காலை என்ன பலன், மாலை என்ன பலன் என்று கூடச் சொல்கிறார். இன்னும் எத்தனை மணிக்கு என்ன பலன் என்று சொல்லாததுதான் குறை என எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த ராசி பலனை கேட்டபோது, எனக்குள் ஓடிய எண்ணம்…. வன்னியில் போர்ச் சூழலின் இறுதிக் கால கட்டங்களில், அங்கே அகப்பட்டிருந்த ஆயிரம் ஆயிரம் மக்களில் எல்லா ராசிக்காரர்களும்தானே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான வாழ்க்கைதானே இருந்திருக்கும்? அல்லது எல்லோருமே ஒரே ராசிக்காரர்களா? இப்படி ஒரே மாதிரியான கடினமான சூழல்களில் அகப்பட்டுக்கொள்ளும் அத்தனை மனிதர்களுக்கும் எப்படி பல ராசியின் பலன்கள் பொருந்திப் போகிறது?

3. அன்பு

மங்கை என்ற வலைப்பதிவில, அவங்க குறிப்பிட்டிருக்காங்க “வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு”. எனக்கென்னமோ யோசிச்சுப் பாத்தா, அதன் நேரெதிர்தான் சரின்னு தோணுது. அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?

ஈழத்து முற்றத்தில் நானும்!

Posted On ஓகஸ்ட் 11, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது இலங்கை, கிறுக்கல்கள்

Comments Dropped leave a response

முற்றம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம். ஈழத்தில், எமது வீட்டு முற்றத்தை நினைக்கும்போது, எத்தனையோ இனிய நினைவுகள். அவற்றையெல்லாம் மீண்டும் எமது வாழ்வில் கொண்டு வர முடியுமா, முடியாமலே போய் விடுமா என்பதுதான் வருத்தம்.

முற்றத்து மாமரம், அதன் நிழலில் மதிய உணவுக்குப் பின்னரான ஓய்வெடுப்பு, முற்றத்தில் விளையாட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்தபடி, வானத்து நட்சத்திரங்களை இரசித்தது, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து பேசிச் சிரித்தது, அதே வெளிச்சத்தில் விளையாடியது, இரவு உணவை அம்மாவின் கையிலிருந்து பெற்று உண்டது. அது மட்டுமா, மதிய நேரத்தில் முற்றத்து கொதிக்கும் வெண்மணலில் சூடு தாங்காமல் வெறும் காலுடன் ஓடுவது….. இப்படி எத்தனை எத்தனை நினைவுகள், ம்ம்ம்ம்

அதுசரி, நான் என்னவோ சொல்ல வந்து, எதை எதையோ சொல்லிக் கொண்டு போறேன். நான் சொல்ல வந்தது ஈழத்து முற்றம் வலைப் பதிவுபற்றி :).

ஈழத்தின் பிரதேசவழக்குகள், பேச்சு வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், சரித்திரம் சம்பந்தமான விடயங்கள் போன்ற பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக, ஈழத்துமுற்றம் வலைப்பதிவு வந்திருக்கிறது.

ஈழத்து முற்றத்தில் 51 பதிவர்கள் (தற்போதைக்கு. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகின்றேன்) பங்களித்து வருகிறார்கள்.  அந்த பங்களிப்பாளர்களில் நானும் ஒருத்தி. நான் எழுதுவதென்னவோ மிகக் குறைவுதான் என்றாலும், ஒரு கூட்டு வலைப் பதிவில் நானும் எழுதுவதில் (ஏதொ ஒப்புக்கு சப்பாணியாக) மகிழ்ச்சி. அங்கே நானெழுதிய பதிவுகளை இங்கேயும் சேமித்து வைக்கும் எண்ணத்தில் இந்த பதிவு. 🙂 (ஏதோ பெரிசா எழுதிக் கிளிச்ச மாதிரி, இங்க சேமிப்பு வேறயா???

பஞ்சியாக் கிடக்கு!

எவ அவ!

எங்க சொல்லுங்கோ பாப்பம் :)!

யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்ப் பெயர்கள்!

சங்கடமான கேள்வி!

Posted On திசெம்பர் 1, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், குழந்தை

Comments Dropped 3 responses

அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் “உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்”. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் “இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. 🙂

அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் “மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?” என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், “நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?”. அதுக்கு நான் “அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது” என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. “நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்.” தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு ஒரு சின்ன idea வந்தது. “உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு “அது ஒரு blood என்று பதில் வந்தது.” அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் ‘விளங்கேல்லை’ என்று சொன்னாள். “இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே” என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. 😦

பெண்கள் vs ஆண்கள்!

Posted On திசெம்பர் 1, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், சமூகம்

Comments Dropped 2 responses

பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.

1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல 🙂

2. பெண்கள் ஆண்களை விட அதிகமாக கதைக்கின்றார்களா என்பதும் ஆராயப்பட்டிருக்கின்றது. பெண்கள் நாளொன்றுக்கு 20,000 சொற்கள் கதைப்பார்கள் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அது உண்மையல்ல என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 16,000 சொற்கள் மட்டுமே (அம்மாடியோவ், அத்தனை சொற்களா) கதைக்கின்றார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம். அந்த ஆராய்ச்சி தரும் அதிகப் படியான தகவல், ஆண்களும் கிட்டத்தட்ட அதே 16,000 சொற்களைப் பேசுகின்றார்கள் என்பதுதானாம். 🙂

3. ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் என்பது பலருடைய (பல ஆண்களுடைய) கருத்து. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களும், சம அளவிலேயே புத்திசாலித் தனத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சி முடிவாம்.

4. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் sex பற்றி நினைப்பதாகவும், ஆண்கள் வெறும் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே sex பற்றி நினைப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம்.

5. ஆண்களா, பெண்களா அதிக காலம் வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்த போது, பெண்களே ஆண்களை விட அதிக வாழ்க்கைக் காலத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளதாம். நோர்வேயில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்காலம் 81.6 ஆகவும், ஆண்களின் வாழ்க்கைக் காலம் 76.4 ஆகவும் இருக்கிறதாம்.

இத்தனையும் சொன்னவர் இறுதியில் பெண்களுக்கு அதிக வாழ்க்கைக் காலம் என்பதற்கு, பெண்களை நோக்கி கொடுத்த comment, “you deserve it ladies”.

என் குட்டி சினேகிதி!

Posted On நவம்பர் 26, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், குழந்தை

Comments Dropped 3 responses

என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. 🙂
bestfriends.jpg

ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. 🙂

bestfrineds1.jpg

🙂 எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

வெறும் கனவா?

Posted On ஜூலை 6, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்

Comments Dropped one response

இது கனவா?

பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில்  நினைவிருக்கும் கனவை (அனேகமாக  கண்  விழிக்கும்போது  கண்டு  கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும்  சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.

மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் “என்ன புதினம்?”. ‘காலங்காத்தால இது என்ன கேள்வி’ என்று இந்தக்  கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும், அவசரமாய்  வேலைக்கு  புறப்பட  வேண்டி இருந்ததில்  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.   அதனால் நான் கடைசியாக கண்டிருந்த அன்றைய கனவை சொன்னேன். ஒரு பெரிய முதலையை எங்கள் வீட்டு குளியலறையில் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறோம். அந்த முதலையின் வாயே குளியல் தொட்டியை விடப் பெரிது. அது எப்படி அந்த தொட்டிக்குள் இருக்கிறதென்பதெல்லாம் தெரியாது. 🙂

நான் கனவு சொல்லும்போது “வேறு வேலையில்லை.” என்று திட்டுபவர், பேசாமல் நான் சொன்ன கனவை கேட்டுவிட்டு, அவரும் ஒரு கனவு சொன்னார். அவர் கண்ட கனவில் ஒரு பாலத்தின் அருகில் கார் விபத்து நடந்ததாகவும், அந்த காரின் ஒரு பக்க சில்லுகள் இரண்டும் மேலே எழுந்து இருந்ததாகவும் சொன்னார். நான் கனவுகளையும், நிஜமான நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை என்றதால் அப்படியே அந்த கதையை விட்டு விட்டு சென்று விட்டேன்.

அன்று மாலை லண்டனில் இருக்கும் ஒரு தம்பிக்கு தொலைபேசினேன். அப்போது அவர்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமான விடயம். அன்று காலையில் அவருக்கு எனது கணவர் கனவில் கண்டது போன்ற அதே நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. அவர் high way யில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி, இரு சில்லுகளும் மேலெழுந்து, பாதையின் ஒரு புறம் இருந்து மறு புறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. நல்ல வேளையாக அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலீஸ் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்தார்களாம். வாகனம், முழுமையாக சரிந்து பாதையில் இழுபட்டுக் கொண்டு சென்றும்கூட, அவர்கள் உயிர் தப்பியிருப்பது மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்று சொன்னார்கள். அந்த விபத்தை நேரில் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சரியப் பட்டார்களாம். லண்டனில், அந்த high way யில், மிகப் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில் அப்படி ஒரு விபத்து நடந்தும், இவர்களது வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் அடித்துக் கொண்டு சேதப்படாமல், இவர்களும் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியம் என்று பொலீஸ் உட்பட அனைவரும் சொன்னதாகச் சொன்னார்கள்.

இதில் என்னுடைய ஆச்சரியம், எப்படி அதே போன்ற கனவு, கிட்டத்தட்ட, அதே நேரத்தில் என் கணவருக்கு வந்தது என்பதுதான். எனது பாட்டியார் இறந்த ஒருநாள் அதிகாலையில், பல மைல் தொலைவில் இருந்து படித்து வந்த எனக்கு, நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. அன்று முழுவதும் நான் என்னவென்று புரியாத ஒரு மனக் கஷ்டத்தில் இருந்ததும், அன்று மாலை, பாட்டி இறந்த செய்தி என்னை வந்து சேர்ந்ததும் இப்போதும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.

I’m not a superstitious person. ஆனாலும் இந்த கனவுகளும், தொடர்ந்த நிகழ்வுகளும் ஆச்சரியமாக இருக்கின்றது.

கனவுகளைப்பற்றி பேசும்போது உங்களிடம் இன்னொரு கனவுபற்றியும்  சொல்லத் தோன்றுகின்றது. சோகக் கனவுபற்றி சொன்னதால், இனி ஒரு சந்தோஷக் கனவு. 🙂

உங்களில் யாராவது கனவில் பறந்ததுண்டா? நான் கனவுகளில் பறந்திருக்கின்றேன். யாராவது என்னை துரத்திக் கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து தப்பிக்கவோ, அல்லது எனக்கு அவசரத் தேவையாக எங்கேயாவது விரைவாக செல்ல வேண்டும் என்று தோன்றும்போதோ நிலத்திலிருந்து மேலெழுந்து பறப்பேன். இறக்கை எதுவும் முளைத்திருக்காது 🙂 . ஆனாலும் இலகுவாக பறக்க முடியும். அது கனவாகவே இருந்தாலும், மிகவும் அபூர்வமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போ நீண்ட நாட்களாக அப்படி கனவு வரவில்லை. 😦

ஒருவேளை எந்த ஆபத்தும் எனக்கு இல்லாததாய் உணர்கின்றேனோ? அல்லது எந்த அவசரமும் இப்போது இல்லையோ தெரியவில்லை. 🙂

நோர்வே -8 (பகல் ராத்திரி0!

Posted On ஜூலை 5, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped leave a response

நோர்வே – 8

நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.

பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள்  மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.

Sankthansaften  நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை  குதிரை  வண்டிலில்  ஊர்வலமாக  அழைத்துச் செல்வார்கள்.  அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் 🙂 ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே…

ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.

 

இங்கே இருக்கும் படத்தில் ஒரு  பெரிய  கோபுரமும்,  பக்கத்திலேயே  ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.

அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.

 பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி.  அப்போது நேரம் மாலை 9.30.

தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.

எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.

அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. 🙂   ஊரில்,  மலைகளில்  வந்து தங்கி இருக்கும்  தீய  சக்திகள்,  பேய்,  பிசாசு  போன்றவை, இந்த  பெரிய  தீப்பிழம்பைக்  கண்டு  ஓடிப்  போய்  விடுமாம்.  தற்போது யாரும் இந்த  கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு  மகிழ்ச்சியான  பொழுது  போக்காகவும்,  முழு  பகலைக்  கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை   தொடர்ந்து  செய்து  வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே 🙂  ) சுற்றித் திரிவார்கள்.

தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.

நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை பார்க்கலாம்.

எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி  கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக  மக்கள்  விளித்திருந்து  கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது “பகல்ராத்திரி”. 🙂

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »