பகிர்தல்!

Posted On செப்ரெம்பர் 23, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம், நோர்வே

Comments Dropped 2 responses

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே ‘வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே’ என்கின்றார்.

இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முழுவதும் சொல்லி முடிக்க முதலே, இவர் ”நாம் வேறு ஏதாவது மகிழ்ச்சியாக பேசலாமே” என்கிறார். அது எப்படி கவலையில் வரும் ஒருவர், இவர் கேட்டதும் மகிழ்ச்சியாக பேச முடியும் என்பதை அவர் யோசிக்கவே இல்லையா என்று எனக்குத் தோன்றியது. எமது நாட்டுப் பிரச்சனை, அல்லது மக்களின் பிரச்சனை பற்றி ஏதாவது பேச்சு வரும்போது, நான் கவலைப்பட்டாலும், அவர் எனக்கும் இதையே சொல்லுகின்றார்.

சிலவேளை அவர் அப்படி சொல்வது, அவரால் அப்படி கவலையான விடயங்களை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தினாலாக இருக்கலாம். ஆனால் அந்த சினேகிதியும், இவரிடம் ஒரு மன ஆறுதலுக்குத்தானே சொல்ல வந்தார். இவர் இப்படி கேட்க மறுத்தால் அவருக்கு அது மனப் பாரத்தை கூட்டாதா என்று தோன்றியது.

மகிழ்ச்சியோ, துக்கமோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுதானே ஆறுதல்.

இன்றைய கனவு!

Posted On செப்ரெம்பர் 8, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது இலங்கை, சமூகம்

Comments Dropped 6 responses

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் :(. நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்……. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

சுதந்திர உணர்வு!

Posted On ஓகஸ்ட் 21, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம், ரசித்தவை

Comments Dropped 3 responses

ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.

அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் குடும்பமில்லாமல், மேலும் தொலை தூரப் பயணம் சினேகிதிகளுடன் சேர்ந்து போக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, சாதாரண எண்ணங்களிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டுத் தோன்றியது. அவள் இருப்பது Australia. நானிருப்பதோ நோர்வே. மற்ற சினேகிதிகள் இருப்பதோ கனடா. இப்படி எல்லோரும் கூட்டாக போக வேண்டும், எமது பழைய காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற அவளது எண்ணம், ஆசை, அந்த நாட்களை மீண்டும் வாழ அவளுக்கு உள்ள ஆசையைக் காட்டியது.

யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அப்படி ஒரு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், எனது குழந்தையின் வயது, விடுமுறை காலத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தில் இப்போதைக்கு பங்கேற்க முடியவில்லை என்று (வருத்தத்துடன்) எழுதினேன். மற்ற சினேகிதிகள் இதற்கு என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பொதுவான மடல் எதுவும் வரவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ளாததில் அவள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்திருப்பாள் என்றே தோன்றியது. காரணம் அவள் மிகவும் உற்சாகத்துடன் இந்த பயணம்பற்றி எழுதி இருந்தாள். ஆனால் அதில் எவரும் இணைந்து கொள்ளவில்லை. எனக்கும் இது கொஞ்சம் மன வருத்தமாய் இருந்ததுபோலவே தோன்றுகிறது.

அதன் பிறகு நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று மீண்டும் ஒரு மடல். அது தனது adventure trip பற்றின மடல். மிகவும் விரிவாக அந்த மடல் இருந்தது.

அதில் தான் மட்டும் தனியாக, எவருடைய எந்த சிறு உதவியுமில்லாமல் ஒரு பயணம் ஒழுங்கு செய்து போக வேண்டும் என்று தோன்றியதாம். காரணம் திருமணத்தின் பிறகு, பல விடயங்களில் யாரையாவது (முக்கியமாக கணவனை) சார்ந்தே இருப்பது போன்ற எண்ணம். திருமணத்தின் முன்னர், துணிச்சலுடன் செய்த பல விடயங்கள், தானாக தனித்து திட்டமிட்டு, முடிவெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்திய விடயங்கள் எதையுமே தற்போது செய்ய முடியாதது போன்ற ஒரு பிரமை. எதை செய்வதாக இருந்தாலும், வேறொருவரிடம் கேட்டு, அதைப்பற்றி ஆராய்ந்து, முடிவெடுத்து…. இவையில்லாமல் முன்புபோலவே இப்போதும் தனித்து செயற்பட முடியும் என்று பார்க்கும் ஆவல்.

வீட்டில் கணவருடனோ, பிள்ளைகளுடனோ கலந்தாலோசிக்காமல், தானாகவே சுற்றுலா வழிகாட்டி ஒன்றைப் பெற்று, எவரிடமும் சொல்லாமல், சுற்றுலா பயணக் குழு ஒன்றுடன் இணைந்து ஒரு வாரப் பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தாளாம். மறுநாள் காலையில் பயணம் என்றால், முதல்நாள் இரவில் ஒரு தாளில் தனது பயணம்பற்றிய முழுமையான குறிப்புக்களையும் குறித்து வைத்தாளாம். தான் போகுமிடங்கள், விலாசங்கள், அவசரமானால் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் அத்தனையும் குறித்து, அவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு, போய் வருவதாக அதிலேயே விடைபெற்றுக்கொண்டு, மறுநாள் புறப்பட்டு விட்டாளாம். அந்த பயணம்பற்றி, தான் அதை எவ்வளவு இரசித்தேன் என்பது பற்றியெல்லாம் அந்த மின்னஞ்சலில் மிகவும் விரிவாக எழுதி இருந்தாள்.

மிகவும் உற்சாகத்துடன் அந்த மடலை முடித்திருந்தாள். ஆனால் அவளுடைய கணவரைப் போலவே, எல்லா கணவர்களும் இப்படிப்பட்ட செயலை, முழுமனதுடன், புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.

நானும் கூட திருமணத்தின் பின்னர், தனித்தியங்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டதாய் எண்ணி கவலைப் பட்டது (படுவது) உண்டு. திருமணமான பெண்களுக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. முழு சுதந்திரத்துடன் எந்த ஒன்றையும் செய்ய முடியாமல் போகின்றதோ?

ஆனால் குடும்பத்துடன் இருப்பதால் ஏற்படும் மற்றைய மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவள் குறிப்பிட தவறுவதில்லை.

அண்மையில் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மடல். அவர்களது திருமணநாளை முன்னிட்டு, பிள்ளைகள் தங்களுக்கு (அவளுக்கும், கணவருக்கும்) ஒரு சுற்றுலா போய், மூன்று நாட்கள் வேறொரு இடத்தில் தங்கி, அங்கே hot air balloon இல் ஏறிப் பார்த்து வரவும் ஒழுங்குகள் செய்து, அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்ததாகவும், போய் வந்த அனுபவத்தையும் மிகவும் இரசனையுடன் எழுதியிருந்தாள். அத்துடன், அந்த மடலில், சினேகிதிகள் மட்டுமாக இணைந்து செல்ல வேண்டிய அந்த பயணத்தைப் பற்றியும் நினைவூட்டி இருந்தாள்.

மரணத்தின் வாசனை!

Posted On மே 25, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது இலங்கை, சமூகம், நூல், ரசித்தவை
குறிச்சொற்கள்: , , ,

Comments Dropped one response

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!

Posted On நவம்பர் 3, 2008

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது இலங்கை, சமூகம், திரைப்படம், ரசித்தவை

Comments Dropped leave a response

எரியும் நினைவுகள்!

எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.

நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.

பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான  அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை  அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.

இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.

பெண்கள் vs ஆண்கள்!

Posted On திசெம்பர் 1, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், சமூகம்

Comments Dropped 2 responses

பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.

1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல 🙂

2. பெண்கள் ஆண்களை விட அதிகமாக கதைக்கின்றார்களா என்பதும் ஆராயப்பட்டிருக்கின்றது. பெண்கள் நாளொன்றுக்கு 20,000 சொற்கள் கதைப்பார்கள் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அது உண்மையல்ல என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 16,000 சொற்கள் மட்டுமே (அம்மாடியோவ், அத்தனை சொற்களா) கதைக்கின்றார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம். அந்த ஆராய்ச்சி தரும் அதிகப் படியான தகவல், ஆண்களும் கிட்டத்தட்ட அதே 16,000 சொற்களைப் பேசுகின்றார்கள் என்பதுதானாம். 🙂

3. ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் என்பது பலருடைய (பல ஆண்களுடைய) கருத்து. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களும், சம அளவிலேயே புத்திசாலித் தனத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சி முடிவாம்.

4. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் sex பற்றி நினைப்பதாகவும், ஆண்கள் வெறும் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே sex பற்றி நினைப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம்.

5. ஆண்களா, பெண்களா அதிக காலம் வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்த போது, பெண்களே ஆண்களை விட அதிக வாழ்க்கைக் காலத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளதாம். நோர்வேயில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்காலம் 81.6 ஆகவும், ஆண்களின் வாழ்க்கைக் காலம் 76.4 ஆகவும் இருக்கிறதாம்.

இத்தனையும் சொன்னவர் இறுதியில் பெண்களுக்கு அதிக வாழ்க்கைக் காலம் என்பதற்கு, பெண்களை நோக்கி கொடுத்த comment, “you deserve it ladies”.

மூட நம்பிக்கையும், அதன் பலனும்???

Posted On ஒக்ரோபர் 1, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே……..

 ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனைவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு ‘மை’ போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.

இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், “உங்களுடைய கோவிலில் இருக்கும் கடவுள் வைரவரை ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் வைரவர் தனது சக்தியை பயன்படுத்தி, உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றார். அதனால்தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல்நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்”.

(உடனே நான் கேட்டேன், “மனிதனால் ஒரு கடவுளை கட்டி வைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கவில்லையா” என்று. அதற்கு அவர், “நான் சொல்லும் கதையை முழுவதுமாய் கேளுங்கோ” என்று சொல்லி தொடர்ந்தார்.)

அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, செய்வினை செய்து புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று சொன்னாராம். அவர்களுக்கு உதவியாக (புதைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்வினையை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு) பக்கத்து வீட்டிலிருப்பவரை கூட்டிக் கொண்டார்களாம். மை போட்டுப் பார்ப்பவர் வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார்களாம். மை போட்டுப் பார்ப்பவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்களாம்.

அந்த வயதானவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல்நலக் குறைவும் வரவில்லையென்றும், தன்னால் இப்போது துவிச்சக்கர வண்டி ஓட்டிக் கொண்டு செல்லக் கூட முடிகின்றது என்றும் ஆனந்தமாக கூறுகின்றாராம்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவர் சொல்கின்றார். அந்த வயதானவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார். அந்த வயதான தம்பதிகளிடம் நிறைய பணம் இருக்கின்றது. அந்த மை போட்டுப் பார்ப்பவருக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள். அதனால் அந்த பணம், அந்த மை போடுபவரின் குடும்பத்தினரின் பாவனைக்கு போய் சேருகின்றது. அதுவும் நல்லதுதானே என்று. இவருக்கும் சுகம், அவர்களுக்கும் தேவையான பணம்.

இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றேன். :^)

ஜோதிடம்!

Posted On செப்ரெம்பர் 21, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால் முடியவில்லை). அதில், ஒரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வழமை போலவே, என்ன ஏது என்று புரியாமலே நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்.

அது ஒரு அமெரிக்க நிகழ்ச்சி. இருவர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் நிகழ்ச்சி நடத்துனர், மற்றவர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஒரு அமெரிக்க பெண்மணி.

அழைக்கப்பட்டிருந்த ஏனைய மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்களில் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர்  காலத்தில்  நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்க, அந்த பெண்மணி உடனேயே பதில் சொன்னார். அட, ‘அமெரிக்காவிலே டிவியில் வந்து நேரடி ஜோதிடம் சொல்லுறாங்க போலிருக்கே’ என்று கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்.

 அடுத்து ஒரு சிறுபெண் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து, “எனக்குரியவரை நான் எப்போது காண்பேன்?” என்று கேட்க, அந்த பெண்மணியும் உடனடியாக, “உன்னுடையவரின் பெயர் Jack. அவரை நீ இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கண்டு பிடிப்பாய்” என்று சொன்னார். பாவம் அந்தப் பெண், இன்னும் இரண்டு வருடத்துக்கு, Jack என்ற பெயருடன் காணும் ஆண்களை எல்லாம் கண்டு குழம்பப் போகின்றாள்.

அடுத்து எழுந்த ஒரு நடுத்தர வயதான பெண்மணி, “என்னைச் சுற்றி எப்போதும் தேவதைகள் இருப்பதை நான் உணர்கின்றேன்” என்று சொல்ல, அந்த ஜோதிட பெண்மணி, “எல்லோரை சுற்றியும் 5 அல்லது 6 தேவதைகள் எப்போதுமே இருக்கும்” என்று சொல்ல, அந்த பெண்மணி, “என்னைச் சுற்றி இருக்கும் தேவதைகளை உன்னால் இப்போது பார்க்க முடிகின்றதா” என்று சீரியசாக கேட்க, அவரும், “ஆம், பார்க்கிறேன்” என்று அதை விட சீரியசாக ஒரு பதில் சொல்கின்றார். “அப்படியானால், அந்த தேவதைகள் சொல்வதையெல்லாம் நான் செய்தால் தப்பில்லைத்தானே” என்று அந்த பெண்மணி கேட்க, இவர் “இல்லை, அவர்கள் சொல்வது போலவே நீ எல்லாம் செய்யலாம்” என்று பதில் கொடுத்தார். ஏதாவது தப்புக்கள் செய்யாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக ஒரு ஆண் எழுந்து, “நான் என்னுடைய வீட்டை விற்க வேண்டும். விற்க முடியுமா?” என்று கேட்க, “ஆம், நீ ஒரு  நல்ல  வீடு  விற்றுக் கொடுப்பவரை உடனடியாக சந்திக்க வேண்டும்”, என்று  பதில்  தந்தார்.  

உடனே நிகழ்ச்சி நடத்துனர், “நானும் என்னுடைய வீட்டை விற்பதாக இருக்கிறேன். எப்போ விற்பேன்?” என்று கேட்க, “இன்னும் 7 கிழமைக்குள் விற்று விடுவாய்” என்று பதில் சொன்னார். நடத்துனரின் முகத்தில் சந்தோஷம்.

அடுத்ததாக எழுந்த ஒரு இளைஞன், “அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை முன் வைத்தான்” (எனக்கென்னவோ அவன் ஒரு நக்கலா கேட்ட மாதிரித்தான் இருந்தது). அதற்கு “எனக்கு யார் என்று தெரியாது. ஆனால் யார் வந்தாலும், இப்ப இருப்பதைவிட நல்ல நிலமை உருவாகும்” என்று சொன்னார். பொதுவான, பெரிய விடயங்களில் ஜோதிடம் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போலும். 🙂

நடத்துனர் தன்னுடைய வீட்டை நிச்சயமாக 7 கிழமைக்குள் விற்று விட முடியுமா என்று மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

எப்படித்தான் மற்றவருடைய எதிர் காலத்தை அப்படியே பட்டு பட்டென்று (எந்த ஒரு பொருளோ, புத்தகமோ அவரிடம் இல்லை) சொல்கின்றாரோ தெரியவில்லை. சும்மா உட்கார்ந்த படியே, அதுவும் டக் டக்கென்று பதில் சொல்லி அனைவரையும் அசத்தி விட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

நான் பார்க்க தொடங்கியபோதே நிகழ்ச்சி முடிவை நெருங்கி விட்டிருந்தது. அதனால் முழுமையாகப் பார்த்து சிரிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் நானும் எழுந்து விட்டேன். உலகில் எல்லா இடத்திலும், எல்லா மாதிரியான ஆட்களும் இருப்பார்கள் போல இருக்கு 🙂

மதம் பிடிக்காதவர்கள்!

Posted On செப்ரெம்பர் 13, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, சமூகம்

Comments Dropped one response

மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். ‘ஆரம்ப வருட திட்டம்’ (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, ‘உலக வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். 🙂

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, ‘உலகிலுள்ள மதங்கள்’. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. 🙂

என்னான்னு பாத்து சொல்லுங்க!

Posted On செப்ரெம்பர் 6, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

singer-hindu-gods1.jpgsinger-hindu-gods.jpg

 நடந்து வந்து கொண்டிருந்தபோது (இங்கே நோர்வேயில்தான்), நிலத்தில் ஒரு காகித்ததாள் கிடந்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது. இரு பக்கத்தையும் ஸ்கான் செய்து போட்டிருக்கிறேன். பெரிதாக்கிப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தில், பல தலைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »