தமிழின் பெருமை!

Posted On ஒக்ரோபர் 31, 2013

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், தமிழ்
குறிச்சொற்கள்:

Comments Dropped 4 responses

அண்மையில் ஒருநாள் நமது வேலைத்தளத்தில் ஒருவர் இரு ஆபிரிக்க வைத்தியர்களை நமது ஆய்வுகூடத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் இங்கு சிலநாட்கள் தங்கியிருந்து, இந்த வைத்தியசாலையில் உள்ள வெவ்வேறு ஆய்வுகூடங்களையும், தொழில்நுட்பங்களையும் அறிய விரும்புகின்றார்கள் என்று கூறினார். அதனால், நாங்கள் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அவர்களை தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினார். அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்திலேயே போய்க் கொண்டிருந்தது.

சரியென்று கூறிவிட்டு, நான் அவர்களது தொலைபேசி எண்களை வாங்கி குனிந்து குறித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குரல், “தமிழ் தெரியுமா” என்று தமிழிலேயே கேட்டது. நிறைய தமிழர்கள் இந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்றார்கள்தான் என்றாலும், இந்த ஆய்வுகூடத்திற்கு தமிழர்கள் எவரும் வந்ததில்லையே என்றெண்ணிக் கொண்டே நிமிர்ந்தேன். மீண்டும் அதே கேள்வியை அந்த ஆபிரிக்கர்களுள் ஒருவர் கேட்டார். அதிர்ச்சியும், மகிழ்ச்சியுமாக இருந்தது. அவருக்கு அந்தக் கேள்வி மட்டும்தான் தமிழில் தெரியுமா அல்லது மேலதிகமாகத் தெரியுமா என்று அறிய, நானும் தமிழிலேயே “நல்லாவே தமிழ் பேசத் தெரியுமே” என்றேன். தொடர்ந்து அவர், “உங்க பெயரென்ன?” என்றார். நானும் பெயரைச் சொன்னேன். மற்ற வைத்தியரும், அழைத்து வந்தவரும் எதுவும் புரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டு நின்றார்கள். எனவே தொடர்ந்த உரையாடல் ஆங்கிலத்திற்குத் தாவியது.

அவர் இங்கு வர முன்னர் வேலூரில் 2 மாதங்கள் இருந்து விட்டு வந்ததாகவும், அதனால் தமிழ் கொஞ்சம் பேசப் பழகிக் கொண்டதாகவும் கூறினார். அத்துடன், உங்கள் மொழி 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாமே என்று சொன்னார். அப்போது மற்றவர், “அப்படியா, ஆச்சரியம்தான். இத்தனை ஆண்டுகளாக இந்த மொழி வளமுடன், உயிருடன் இருப்பது” என்றார். நம் மொழியை ஒன்னொருவர் புகழ்ந்து சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிலநேரம் உரையாடிவிட்டுப் போனபோது, மறக்காமல் தமிழிலேயே “போய்ட்டு வரேன்” என்று கூறிச் சென்றார்.